Tuesday 2 July 2013

சம்பள பட்டியலில் பணியில் இல்லாதவர் பெயர் மூலம் ஊதிய மோசடி: "108' ஆம்புலன்ஸ் நிறுவனம் மீது பகிரங்க குற்றச்சாட்டு

பணியில் இல்லாதோர் பெயரை, சம்பள பட்டியலில் இருந்து நீக்காமல், தொடர்ந்து அவர்கள் பெயரில் ஊதியம் பெறும் முறைகேடு நடப்பதாக, "108' ஆம்புலன்ஸ் பணிகளை நிர்வகிக்கும், இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாலை விபத்து, பிரசவம் மற்றும் மாரடைப்பு போன்ற உடல்நல பாதிப்புக்கு ஆளவோர் என, உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரை, மருத்துவமனையில் சேர்க்க, அவசர கால, "108' ஆம்புலன்ஸ் திட்டம், அமலில் உள்ளது. இத்திட்டத்தில், மாநிலம் முழுவதும் இயக்கப்படும், 600க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில், ஓட்டுனர், அவசர கால மருத்துவ பணியாளர் (இ.எம்.டி.,) என, 2,500 பேர் பணியாற்றுகின்றனர். பணிச்சுமை, சொந்த மாவட்டத்தில் பணிபுரிய முடியாதது, ஊதிய பற்றாக்குறை போன்ற காரணங்களால், "108' ஆம்புலன்ஸ் பணியாளர்களில் பெரும்பாலோர் பணியில் நீடிப்பதில்லை. இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக, பணியில் இருந்து விடுக்கப்படுவோர் அல்லது பணியை ராஜினாமா செய்யும் அனைவரின் பெயரையும், சம்பள பட்டியலில் இருந்து நீக்காமல், அவர்கள் பெயரில் தொடர்ந்து, அரசிடம் இருந்து சம்பளம் பெறும் முறைகேடு நடந்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, "108' ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில அமைப்பு செயலர் பால் கண்ணன் கூறியதாவது: வினோத்குமார் என்பவர், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில், "108' ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். பெற்றோருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால், இரண்டு நாள் விடுமுறை எடுத்தார். இதனால், கன்னங்குடிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். சிவகங்கையில் இருந்து, கன்னங்குடி சென்றுவர, பேருந்து கட்டணமாக மாதம், 1,500 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருந்ததால், காளையார்கோவில் அல்லது சிவகங்கைக்கு பணியிடமாற்றம் கோரினார். இடமாற்றம் கிடைக்காததால், 2012ம் ஆண்டு, ஜூனில், பணியில் இருந்து நின்றார். ஆனால், கடந்த ஏப்ரல் மாத சம்பள பட்டியலில், அவரது பெயர் இடம் பெற்றிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தோம். அதில், ஏப்ரல் மாதம் அவர், 30 நாளும் பணிக்கு வந்திருப்பதாகவும், பி.எப்., - இ.எஸ்.ஐ., க்கான மாத சந்தா பிடித்தம் செய்யப்படுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.

கடந்த, ஐந்து ஆண்டுகளில், நிர்வாகத்தின் பணியாளர் விரோத போக்கால், "108' ஆம்புலன்ஸ் பணியில் இருந்து, 900க்கும் மேற்பட்டோர், தாமாக நின்றுள்ளனர். ஆனால், "100 பேர் வரை மட்டுமே இது போன்று, பணியில் இருந்து நின்றுள்ளனர்' என, இ.எம்.ஆர்.ஐ., நிறுவனம் தெரிவித்து வருகிறது. எனவே, சம்பள மோசடி குறித்து, தமிழக அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, பால் கண்ணன் கூறினார். இ.எம்.ஆர்.ஐ., நிறுவன மதுரை மண்டல மேலாளர் லட்சுமணன் கூறுகையில், ""நிறுவனத்தின் நிதி பயன்பாடு குறித்து, மாதந்தோறும் தணிக்கை நடக்கிறது. எனவே, சம்பள மோசடி நடக்க வாய்ப்பில்லை. எங்கள் சேவைக்கு, களங்கம் கற்பிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது,'' என்றார்.

No comments:

Post a Comment