Saturday 24 August 2013

"108' ஆம்புலன்ஸில் மருத்துவக் கருவிகள் நோயாளிக்கு முதலுதவி அளிப்பதில் சிரமம்


மதுரைக்கு புதிதாக வாங்கப்பட்ட சில "108'ஆம்புலன்ஸ்களில், முதலுதவி செய்வதற்கு தேவையான கருவிகள் இல்லாததால், நோயாளியின் உயிர் கேள்விக்குறியாகி வருகிறது. விபத்தில் சிக்குபவர்கள், உடல் நலக்குறைவுக்கு ஆளானவர்கள், "108' ஆம்புலன்ஸ்களில் இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதுவரை நோயாளியின் உயிரை காக்க, முதலுதவி அளிக்கும் வகையில், "கிட்னி ட்ரே, யூரின் பான், ஆர்ட்ரே போர்செப்ஸ்,' உட்பட 17 வகை மருத்துவ கருவிகள் வண்டியில் இருக்க வேண்டும். இதில், வண்டியில் ஏற்றும் போது மயக்கநிலையில் உள்ள நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் "குளூகோ மீட்டர்', ரத்த அழுத்தம் பார்த்தல், "தெர்மா மீட்டர்', வட்ட வடிவ கத்திரி, நாடித்துடிப்பை கண்டறியும் "பல்ஸ் ஆக்ஸி மீட்டர்', "ஸ்டெதஸ்கோப்' கருவிகள், மிக அத்தியாவசியமானவை. நோயாளிகளை வண்டியில் ஏற்றும் போது, என்னென்ன நகை அணிந்து வந்தனர், மொபைல் போன், பணம் உட்பட அனைத்து விபரங்களையும் கேமராவில் படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும். இக்கருவிகள் புதுவண்டிகளில் மட்டுமின்றி, பெரும் பாலான பழைய ஆம்புலன்ஸ் களில் இல்லை. சத்திரப்பட்டி பகுதி வண்டியில் "ஸ்ட்ரெச்சர்' சக்கரம் உடைந்த நிலையில் உள்ளது. காளவாசல் பகுதி புதுவண்டியில், பெரும்பாலான மருத்துவக் கருவிகள் இல்லை.

இதுமட்டுமின்றி, இயற்கை சீற்றம் மற்றும் பேரழிவு ஏற்படும் போதும் ஆம்புலன்ஸின் தேவை அவசியம். சீட்டுக்கு அடியில் "ஆக்ஸா பிளேடு, கத்தி, கயிறு, தீயணைப்பு பிளாங்கெட்' உட்பட 18 வகை கருவிகள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான கருவிகள் இல்லாத நிலையில், நோயாளிகள் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். 
இதனால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அவசியத்தை உணர்ந்தாவது, அனைத்து மருத்துவக் கருவிகளும் இருக்கின்றனவா என்பதை, டிரைவர், 
டெக்னீசியன்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பரிசோதிக்க வேண்டும்.
மதுரை மேலாளர் தணிகை வேல்முருகனிடம் கேட்டபோது,""எல்லா வண்டிகளிலும் மருத்துவக் கருவிகள் உள்ளன. பழுதுபார்க்க செல்லும் போது, கருவிகள் இருக்காது. வண்டி சென்னை சென்று வந்தபின், மீண்டும் கருவிகளை கொடுத்துவிடுவோம். கருவிகளை தொலைத்துவிட்டால், அதற்கான விளக்கத்தை பெற்ற பின், சில நாட்கள் கழித்து தேவைப்பட்டால் கருவிகள் வழங்கப்படும்,'' என்றார்

No comments:

Post a Comment