Saturday 28 December 2013

108 ஆம்புலன்ஸ் பைலட், இஎம்டி, கால்சென்டர் ஊழியர்களின் வேலைநிறுத்தக் கோரிக்கைகள்

கோரிக்கைகள் தொடர்பாக நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக தொழிலாளர் ஆணையரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தொழிற்தாவாவின் நகல்:



பெறுநர் : 
உயர்திரு. தொழிலாளர் ஆணையர் அவர்கள் 
தொழிலாளர் துறை 
DMSஅலுவலக வளாகம்
தேனாம்பேட்டை, சென்னை-6. 

ஐயா, 
பொருள் : தொழிற் தகராறுகள் சட்டம் 1947, பிரிவு 2K-ன் படி 
        தொழிற்தகராறு எழுப்புவது சம்பந்தமாக.

நாங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றும் பைலட் (டிரைவர்) இ.எம்.டி (அவசர மருத்துவ உதவியாளர்) மற்றும் கால்சென்டர் ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பதிவு பெற்ற சங்கமாகும். எங்களது கோரிக்கைகள் சம்பந்தமாக நாங்கள் பலமுறை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் இல்லை. கடைசியாக கடந்த 05.08.2013 அன்று சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கும் நிர்வாகம் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்நிலையில் 25.08.2013 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பைலட் (டிரைவர்) இ.எம்.டி (அவசர மருத்துவ உதவியாளர்) மற்றும் கால்சென்டர் ஊழியர்களின் பின்வரும் கோரிக்கைகள் சம்பந்தமாக மாநில அளவில் சென்னையில் தொழிலாளர் ஆணையரிடம் தொழிற்தாவா எழுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டு சமூகம் தொழிலாளர் ஆணையரிடம் இந்த தொழிற்தாவாவினை பணிந்து சமர்ப்பிக்கின்றோம். 

கோரிக்கைகள் :

1. ஒரு நாளில் 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரம் 8 மணி நேரமாகக் குறைக்கப்பட வேண்டும்.

2. 8 மணி நேரத்திற்கு மேல் செய்யும் ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.  

3. இதுநாள் வரை 8 மணி நேரத்திற்கு மேல் பார்த்த வேலைக்கு ஓவர் டைம் சம்பளமாக இரட்டிப்புச் சம்பளம் வழங்கப்பட வேண்டும். 

4. சமவேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு இணையான சம்பளம் பைலட்டுகளுக்கும், கிராம சுகாதார செவிலியர்களுக்கு இணையான சம்பளம் இ.எம.டிகளுக்கும் இதனடிப்படையில் இதற்கு அடுத்தபடி நிலையில் நிர்ணயிக்கப்படும் ஊதியம் கால்சென்டர் ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். 

5. தற்போது இருக்கும் சம்பளக் கட்டமைப்பில் அகவிலைப்படியை கூடுதலாகச் சேர்த்து அகவிலைப்படியாக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 4500/- வீதம் வழங்கப்பட வேண்டும். 

6. இதுநாள் வரை வழங்கப்படாத அகவிலைப்படி பாக்கித் தொகைகள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும். 

7. அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்தால் மாற்று விடுப்பு அல்லது இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும். 

8. இதுநாள் வரை வேலை பார்த்த அரசு விடுமுறை நாட்களைக் கணக்கிட்டு இரட்டைச் சம்பளம் பாக்கி தரப்பட வேண்டும். 

9. சம்பளத்தில் 12% சதவீதம் வருடாந்திர போனஸாக வழங்க வேண்டும். 

10. முந்தைய ஆண்டுகளில் வழங்கப்படாத போனஸ் பாக்கி வழங்கப்பட வேண்டும். 

11. பெண் ஊழியர்களுக்கு ஆறுமாத காலம் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்பட வேண்டும். 
12. உயர் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி வேலையிழந்து இருக்கும் திண்டுக்கல் இ.எம்.டி பாப்பாத்தி மற்றும் ராமநாதபுரம் இ.எம்.டி கலைவேணி ஆகியோரை பின் சம்பளத்துடன் பணித்தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். 

13. மாவட்ட மேலாளர்கள் பால்ராபின்சன் மற்றும் குமரன் ஆகியோர் மீது கொடுக்கப்பட்டுள்ள பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 
14. ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசாணை: சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டம் துறை அரசாணை எண். 166 நாள்: 28.08.2003 –ன் படி அமைக்கப்பட வேண்டிய பெண்கள் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். 
15. பாரபட்சம் இல்லாத, வெளிப்படையான இடமாறுதல் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அது சொந்த மாவட்டத்திற்கு இடமாறுதல் கோருபவர்களுக்கு முன்னுரிமையும், எவரும் இடமாறுதல் கோராத போது “கடைசியில் வந்தவர் முதலில்” என்ற விதியின் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்படுவதும் என்ற அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும். 
16. பிற மாவட்டங்களுக்கு டெபுடேசன் அடிப்படையில் அனுப்பும் போது டெபுடேசன் காலம் நிர்ணயிக்கப்பட வேண்டும். டெபுடேசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு சென்னையில் ரூ.450ஃ-ம், மற்ற மாவட்டத்தில் ரூ.400ஃ-ம், கூடுதல் படியாகத் தரப்பட வேண்டும். டெபுடேசனில் செல்ல விருப்பம் தெரிவிப்பவர்களையே முதலில் அனுப்ப வேண்டும். அவ்வாறு எவரும் விருப்பம் தெரிவிக்காத போது கடைசியில் வந்தவர் முதலில் செல்ல வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் டெபுடேசனில் அனுப்ப வேண்டும்.  
17. பணியில் இருக்கும் போது ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானால் பைலட் மீது போடப்படும் கிரிமினல் வழக்கையும், சிகிச்சைக்காகும் செலவையும் நிர்வாகமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். விபத்தைக் காரணம் காட்டி வேலை வழங்க மறுப்பதை கைவிட்டு விபத்தில் சிக்கிய பைலட்டிற்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். 
18. பணியின் போது ஏற்படும் விபத்தில் மரணம் அடையும் தொழிலாளர்களுக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்கப்பட வேண்டும். 
19. ஆம்புலன்ஸ் வாகனம் அடிக்கடி விபத்துக்குள்ளாகி ஊழியர்களின் உயிர்களைப் பழி வாங்குவதைத் தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசுத்தரப்பு, தனியார் நிர்வாகத்தரப்பு மற்றும் தொழிற்சங்கத்தரப்பு, பிரதிநிதிகள் அடங்கிய பராமரிப்புக் கமிட்டி அமைத்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை வண்டிகளை ஆய்வு செய்து குறைகள் உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். 
20. நோயாளியை ஏற்றிச் செல்லும்போது வழியில் சிகிச்சை அளிப்பதற்காக ஆலோசனை வழங்கும் நுசுஊP மருத்துவர்களை கூடுதல் எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். 
21. இரவு நேர ஷிப்டில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதலாக சம்பளத்தில் 25 சதவீதம்  இரவு நேர ஷிப்ட் படித்தொகையாக வழங்கப்பட வேண்டும். 
22. கால்சென்டர் ஊழியர்களுக்கு, சென்னையில் உள்ள மற்ற கால்சென்டர்களில் இருப்பதைப் போல் வாரத்தில் 2 நாட்கள் தொடர்ச்சியான விடுமுறைகள் சம்பளத்துடன் வழங்க வேண்டும். 
23. கால்சென்டர் ஊழியர்களுக்கு காது, மூக்கு, தொண்டை சம்பந்தமாக தொழில்முறை நோய்கள் வராமல் தடுக்கும் முகமாக, 6 மாத காலத்திற்கு ஒருமுறை முறையான மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் வழங்க வேண்டும். 
24. ஆபத்தான நோய்த் தொற்று உள்ள நோயாளிகளைக் கையாள்வதால் இ.எம்.டி மற்றும் பைலட்களுக்கு அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனையும் சிகிச்சையும் வழங்க வேண்டும். 
25. ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடங்களில் தண்ணீர் வசதியும், பாதுகாப்பும் உள்ள ஓய்வு அறை வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும். 
26. சாப்பாட்டு நேரம் 1 மணி நேரம் ஒதுக்கப்பட வேண்டும். மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்படாமல் அருகாமையில் உள்ள ஆம்புலன்ஸ்களை ஒருங்கிணைத்து சுழற்சி முறையில் இந்த 1 மணி நேரம் ஒதுக்கப்பட வேண்டும். 
27. அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களது வீட்டில் இருந்து வேலைக்குச் சென்றுவர இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும். 
28. வேலைக்கு சேரும்போது சமர்ப்பிக்கப்படும் அசல் சான்றிதழ்களை 30 நாட்களுக்குள் சரிபார்த்து விட்டு திரும்பக் கொடுத்துவிட வேண்டும். தற்போது நிர்வாகம் வாங்கி வைத்திருக்கும் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். 
29. தொழிற்சங்க நடவடிக்கைக்காக பழிவாங்கப்பட்டு வேலையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும், பின்னிணைப்பு 1 இல் பட்டியலிடப்பட்டுள்ள ஊழியர் அனைவரும்; பின் சம்பளம் மற்றும் பணித் தொடர்ச்சியுடன் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 
30. தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பின்னிணைப்பு 2 இல் பட்டியலிடப்பட்டுள்ள ஊழியர் அனைவரது பணியிடமாறுதல் உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர்கள் (அடைப்புக் குறிக்குள் உள்ள அவர்களது) சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தப்பட வேண்டும். 
31. நிர்வாகத்தில் புதிதாக ஆள் எடுக்கும் போது, ஏற்கனவே வேலை பார்த்து அனுபவமுள்ள பழைய தொழிலாளர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் பணியில் இல்லாத இடைக்காலத்தை நீண்ட விடுப்பாகக் கருதி அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். 
32. சம்பள உயர்விற்கு தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் ரகசியமான மதிப்பீட்டு முறை கைவிடப்பட்டு பணிமூப்பின் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். 
33. சம்பள உயர்விற்கான பேச்சுவார்த்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிற்சங்கத்துடன் நடத்தப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள,

(மு.செந்தில்குமார்)
மாநிலப் பொதுச் செயலாளர்
இணைப்பு:
1) பின்னிணைப்பு 1- தொழிற்சங்க நடவடிக்கைக்காக பழிவாங்கப்பட்டு வேலையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் தொழிலாளர் பட்டியல்
2) பின்னிணைப்பு 2- தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர் பட்டியல்
3) நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனு நாள்: 05.08.2013
4) தொழிற்தகராறுகள் சட்டம் பிரிவு 2 கே இன் கீழ் படிவம்
5) நகல்கள் (ஆறு பிரதிகள்)

No comments:

Post a Comment